வாடகை வீட்டை வக்கீல் காலி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


வாடகை வீட்டை வக்கீல் காலி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2020 9:30 PM GMT (Updated: 26 Feb 2020 8:14 PM GMT)

வாடகை வீட்டை 2 வாரத்துக்குள் காலி செய்ய வேண்டும் என்று வேலூர் வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர், ரூ.1,800-க்கு வாடகை வீட்டில் குடியிருந்தார். அந்த வீட்டை முறையாக பராமரிக்காததால், வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் கூறினார். இதுதொடர்பாக ஐகோர்ட்டில் அந்த வக்கீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வக்கீல் தொழில் புனிதமான தொழிலாகும். ஒவ்வொரு தொழிலுக்கும், தொழில் தர்மம் என்று உள்ளது. தொழில் தர்மம் மீறப்படும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்மை காலங்களில் வக்கீல் தொழிலுக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இல்லை.

இந்த வழக்கில், மனுதாரரான வக்கீலை தொடர்ந்து வாடகை வீட்டில் வசிக்க அனுமதித்தால், எதிர்காலத்தில் ஒருவர் கூட வக்கீல்களுக்கு வாடகைக்கு வீடு தர முன்வரமாட்டார்கள். நீதி பரிபாலனத்தின் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

ஒரு காலத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு வக்கீல்களுக்கு சமுதாயத்தில் மரியாதையும், மதிப்பும் இருந்தது. இதற்கு உதாரணமாக சென்னையில் ஓடிய ‘டிராம்’ வண்டியில் என் தந்தை பயணம் செய்தார். அப்போது நடந்த சம்பவத்தை என்னிடம் கூறினார். ஒரு வாலிபர் நின்றுகொண்டு ‘டிராம்’ வண்டியில் பயணம் செய்துள்ளார். அவரிடம் ஒரு முதியவர் என்ன வேலை செய்கிறீர்கள்? என்று கேட்டபோது, அந்த வாலிபர் வக்கீல் என்று கூறியுள்ளார்.

உடனே அந்த முதியவர் எழுந்து, அந்த வாலிபரை இருக்கையில் அமரும்படி கூறியுள்ளார். அந்த அளவுக்கு வக்கீல் என்றால் சமுதாயத்தில் உயர்ந்த மரியாதையும், நற்பெயரும் அந்த காலத்தில் இருந்துள்ளது. அதுமட்டுமல்ல நாட்டின் விடுதலைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற பல தலைவர்கள் எல்லாம் வக்கீலாக இருந்தவர்கள். ஒரு காலத்தில் வக்கீல்களுக்கு உயர்ந்த மரியாதை கிடைத்தது போல இப்போது கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

எனவே, மனுதாரர் (வக்கீல்) இந்த உத்தரவு கிடைத்து 2 வாரத்துக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். காலி செய்யவில்லை என்றால், போலீசார் உதவியுடன் வீட்டை காலி செய்ய அதன் உரிமையாளர் நடவடிக்கை எடுக்கலாம்.

அதேபோல, வக்கீல் மீது வீட்டின் உரிமையாளர் விரும்பினால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் செய்யலாம். அந்த புகார் மீது பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், வக்கீல்கள் மீது சமுதாயத்தில் கெட்ட பெயர்கள் உருவாகும். எனவே, இந்த வழக்கை முடித்துவைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story