சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க கமிட்டி - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க கமிட்டி - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-27T03:47:40+05:30)

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க கமிட்டி அமைக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆண்டனி கிளமென்ட் ரூபின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கலைமான்கள், புள்ளிமான்கள், குள்ளநரிகள், காட்டு பூனைகள் உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்கள் உள்ளன. அங்குள்ள குடியிருப்பில் வசித்து வரும், 1,300-க்கும் மேற்பட்ட குடும்பங்களால் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் தேங்குகின்றன. இந்த குப்பையை உண்பதால் மான்கள் உள்ளிட்டவை உயிரிழக்கின்றன. எனவே, ஐ.ஐ.டி. வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வனவிலங்குகள் பாதிக்கப்படாத வகையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் குப்பைகள் முறையாக கையாளப்படுகிறது’ என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. மேலும், ‘சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் குப்பைகளை கையாள்வது, வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தமிழக வனத்துறை, சென்னை ஐ.ஐ.டி., அதிகாரி அடங்கிய கமிட்டி அமைக்கப்படுகிறது. இந்த கமிட்டி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு 6 மாதத்துக்கு ஒருமுறை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பித்தது.

Next Story