அரசுத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி விவாதிக்க தமிழக சட்டசபை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது


அரசுத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி விவாதிக்க தமிழக சட்டசபை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது
x
தினத்தந்தி 27 Feb 2020 12:00 AM GMT (Updated: 26 Feb 2020 11:46 PM GMT)

அரசுத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ந்தேதி நடந்தது. முதல் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 9-ந்தேதி வரை நடந்து முடிந்தது.

பின்னர் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்-அமைச்சரும் நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர் பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச்சட்டம், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. எனவே இந்த கூட்டத்தொடர் பரபரப்புடன் நடைபெற்றது. பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 20-ந்தேதியன்று பதிலளித்து பேசினார். அதோடு சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

பொதுவாக, அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மானியக்கோரிக்கை தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். ஆனால் 20-ந்தேதியன்று சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சட்டசபை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டி இருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

எனவே முன்பண மானியக்கோரிக்கை, அரசுத்துறைகளின் மானியக்கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் இந்த கூட்டத்தொடரில் தொடர்ந்து நடைபெறும். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, எந்தந்த மானியக்கோரிக்கை எந்த தேதியில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அந்த வகையில், மார்ச் முதல் வாரத்தில் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரின்போது சட்டசபையில், தமிழக அரசு நியமித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கைகள் (ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை பற்றிய அறிக்கை), அரசுத்துறைகளின் செயல்பாடுகள் பற்றி மத்திய தணிக்கைத்துறை தாக்கல் செய்யும் அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

Next Story