சட்டவிரோத குடிநீர் ஆலைகள்; நடவடிக்கை கோரிய வழக்கு மார்ச் 3க்கு ஒத்திவைப்பு


சட்டவிரோத குடிநீர் ஆலைகள்; நடவடிக்கை கோரிய வழக்கு மார்ச் 3க்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 10:31 AM GMT (Updated: 27 Feb 2020 10:31 AM GMT)

அனுமதியின்றி சட்டவிரோதம் ஆக நிலத்தடி நீர் எடுக்கும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் 3க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சிவமுத்து என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு கடந்த 1987-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின்படி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் எந்த ஓர் அனுமதியும் இல்லாமல் பலர் நிலத்தடி நீரை எடுக்கின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 420 ஆலைகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றனர். எனவே, அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீரின் அளவு குறைகிறது. எனவே, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் இழுத்து மூடவேண்டும்.

இந்த ஆலைகள் உரிய அனுமதியை எதிர்காலத்தில் பெற்றாலும், ஐகோர்ட்டு அனுமதியில்லாமல், இந்த ஆலைகள் இயங்க அரசு அனுமதிக்கக்கூடாது.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் எத்தனை குடிநீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன? எத்தனை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இதுபற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  இதில், ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை செய்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் தெரிவித்தனர்.

இதன்பின்பு, அரசிடம் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கானது மார்ச் 3ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story