சி.ஏ.ஏ. ஆதரவு பா.ஜ.க. பேரணி; பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு


சி.ஏ.ஏ. ஆதரவு பா.ஜ.க. பேரணி; பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு
x
தினத்தந்தி 27 Feb 2020 12:39 PM GMT (Updated: 27 Feb 2020 12:39 PM GMT)

திருப்பூரில் சி.ஏ.ஏ. ஆதரவு பா.ஜ.க. பேரணி நடைபெற உள்ள நிலையில் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மத அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கவகை செய்துள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிராக  இந்தியாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. டெல்லி, உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்றன.  இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.  தொடர்ந்து கடந்த சில நாட்களாக டெல்லியில் வன்முறை பரவியுள்ளது.  இதில் தலைமை காவலர், உளவு பிரிவு அதிகாரி உள்பட பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் பேரணி, பிரசாரங்கள் நடந்து வருகின்றன.  திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை பா.ஜ.க. சார்பில் பேரணி ஒன்று நடத்தப்படுகிறது.  இந்த பேரணி சி.டி.சி. பகுதியில் இருந்து பெரிய கடை வீதி வழியாக செல்கிறது.

பெரிய கடை வீதி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பிரியாணி விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.  இதனால் பிரியாணி சங்கத்தினர் தங்களது பிரியாணி கடை மற்றும் பிரியாணி அண்டா ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டு திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து உள்ளனர்.

கோவையில் இந்து முன்னணி பொறுப்பாளர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவம் நடந்தது.  இதனை தொடர்ந்தே பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story