ஆஸ்பத்திரியில் அன்பழகன்: என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


ஆஸ்பத்திரியில் அன்பழகன்: என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 Feb 2020 10:45 PM GMT (Updated: 27 Feb 2020 10:43 PM GMT)

ஆஸ்பத்திரியில் க.அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் (வயது 97) உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தினமும் அவரது உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.

இந்தநிலையில் மு.க.ஸ்டாலினுக்கு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாள் ஆகும். வழக்கமாக அவர் தனது பிறந்தநாளன்று குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடுவார். தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளையும் பெறுவார். தற்போது அன்பழகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழினத்தின் நிரந்தர பேராசிரியரும், தி.மு.க. பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான க.அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கால் நூற்றாண்டு காலம் இந்த இனத்துக்கும், மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய அவர் உடல் நலிவுற்று இருக்கும் இந்த சூழலில் மார்ச் 1-ந்தேதி, நான் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1-ந்தேதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழர் நலன் காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட க.அன்பழகன் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story