டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்


டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 March 2020 9:15 PM GMT (Updated: 1 March 2020 8:41 PM GMT)

டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை, 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை அசோக் நகரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், முதன்மை செயலாளர்கள் உஞ்சை அரசன், பாவரசு, துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, செய்தி தொடர்பாளர் பாவலன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க வேண்டும். கலவரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய குடியுரிமை பதிவேடு (என்.பி.ஆர்.) நடவடிக்கையை மேற்கொள்வதில்லை என்று சொல்லிக்கொண்டே அதில் கேட்கப்படும் பெற்றோர் குறித்த கேள்விகளை தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) வினாக்களுக்குள் சேர்த்து வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் என்.பி.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை பறி போகும். எனவே, என்.பி.ஆர். நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

“இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல; இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அரசாங்கத்துக்குக் கட்டாயம் எதுவும் இல்லை” என்ற சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய மோசமான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

வெறுப்புப் பேச்சுகளும், வெறுப்புக் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், சட்ட ஆணையம் தயாரித்துத் தந்த வெறுப்புப் பிரசாரத்தைத் தடுப்பதற்கான புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், அதை சட்டமாக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Next Story