சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலின் உருவம் பதித்த 67 கிலோ சிறுதானிய இட்லி - கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்
சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலின் உருவம் பதித்த 67 கிலோ சிறுதானிய இட்லி தயாரிக்கப்பட்டது. இதனை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 67 கிலோ எடையில் இட்லி தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் உள்ள அலுவலகத்தில் திணை, ராகி, கேழ்வரகு, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களால் செய்யப்பட்ட 67 கிலோ எடையுள்ள இட்லி தயாரானது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் இட்லி இனியவனின் மேற்பார்வையில் தயாரான இந்த இட்லியில் மு.க.ஸ்டாலினின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் தி.மு.க. கட்சி கொடியும், உதயசூரியன் சின்னத்தையும் இட்லியில் பதித்து அழகுற வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்த 67 கிலோ இட்லி சங்கத்தின் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டத்திலும் காட்சி படுத்தப்பட்டது. இந்த இட்லியை தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். இட்லியில் மு.க.ஸ்டாலின் உருவத்தையும், கட்சி கொடி மற்றும் கட்சியின் சின்னத்தையும் அழகுற வடிவமைத்து இருப்பதாக இட்லி இனியவனுக்கு அவர் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதுகுறித்து இட்லி இனியவன் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இட்லியை தயாரித்துள்ளோம். அதேவேளை தற்போது சிறுதானியங்களில் இருந்து அதிக அளவு மக்கள் விலகி இருக்கக்கூடிய சூழலில் சிறுதானியத்தின் அவசியத்தையும், ஆரோக்கியத்தையும் எடுத்துச் சொல்லும் விதமாக அனைவருக்கும் சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த இட்லி தயாராகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story