ரஜினிகாந்துடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு; குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதித்தனர்
நடிகர் ரஜினிகாந்துடன் இஸ்லாமிய மதகுருமார்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவருடன் விவாதித்தனர்.
சென்னை,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) வரவேற்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து கூறிய கருத்தை கண்டித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் வி.எஸ்.அன்வர் பாதுஷாஹ் உலவி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘ சி.ஏ.ஏ சட்டம் குறித்து ரஜினிகாந்தை சந்தித்து விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் ரஜினிகாந்தை சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் இஸ்லாமிய மதகுருமார்களான தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி, செயலாளர் வி.எஸ்.அன்வர் பாதுஷாஹ் உலவி, பொருளாளர் எஸ்.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, துணைச்செயலாளர் ஏ.அப்துல் அஜீஸ் பாகவி, துணைச்செயலாளர் கே.எம். இல்யாஸ் ரியாஜி ஆகியோர் நேற்று சந்திக்க வந்தனர்.
அவர்களை ரஜினிகாந்த் வாசலில் வந்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர் பச்சை நிற பொன்னாடை அணிவித்து அவர்களுக்கு மரியாதை செய்தார். அப்போது ரஜினிகாந்துக்கு ‘இஸ்லாமிய நாகரிகம் தாலீபானின் பிடியில் விமர்சனங்களை வென்றவர்’ என்ற புத்தகத்தை மத குருமார்கள் வழங்கினர். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்தும், இஸ்லாமிய மத குருமார்களும் சுமார் 1 மணி நேரம் பேசினர். இந்த சந்திப்பு முடிந்தவுடன் மத குருமார்களை வாசல் வரை வந்து ரஜினிகாந்த் வழி அனுப்பி வைத்தார்.
ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த் கடந்த 5-ந்தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மதகுருமார்கள் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என்று கருத்து தெரிவித்து இருந்தார். நாங்கள் அதற்கு ஒரு பதில் அறிக்கை கொடுத்தோம். அந்த அறிக்கையை நான் ஐதராபாத்தில் இருக்கும்போது பார்த்தேன். மிகவும் கண்ணியமான முறையில் அந்த அறிக்கையை கொடுத்து இருந்தீர்கள் என்று ரஜினிகாந்த் எங்களிடம் ஏற்கனவே தெரிவித்தார்.
இந்தநிலையில் நாங்கள் ரஜினிகாந்தை சந்தித்தோம். எங்களை மிகவும் கண்ணியமான முறையில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை பற்றிதான் நாங்கள் விவாதித்தோம்.
முஸ்லிம் மக்களின் அச்ச உணர்வை அவர் புரிந்துகொண்டார். அந்த அச்ச உணர்வை போக்கி, நியாயமான நிலைகளை, காரணங்களை கூறி அச்சங்களை போக்க என்னென்ன அம்சங்களில் உங்களோடு சேர்ந்து பங்களிப்பு கொடுக்க வேண்டுமோ, அதனை செய்கிறேன் என்றும் உறுதியோடு தெரிவித்தார்.
இந்த சட்டங்கள் தொடர்பான அச்சத்தை போக்கி, நாட்டில் அமைதி நிலையை உண்டாக்குவதற்கு உங்களோடு சேர்ந்து நானும் முழுமையான பங்களிப்பு அளிப்பேன் என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறினார். எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி அனைத்து கருத்துகளையும் கவனமாக கேட்டறிந்த ரஜினிகாந்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
அன்வர் பாதுஷாஹ் உலவி கூறும்போது, ‘முஸ்லிம் மதகுருமார்கள் போராட்டத்தை தூண்டிவிடவில்லை. அவர்கள் சட்டங்களை தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் ரஜினிகாந்த் புரிந்துகொண்டார்’ என்றார்.
Related Tags :
Next Story