மீனவர்கள் மேம்பாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.300 கோடி செலவு செய்யப்பட்டது எப்படி? - மீன்வளத்துறை இயக்குனர் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மீனவர்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பெற்ற ரூ.300 கோடி எந்த வகையில் செலவு செய்யப்பட்டது? என்பதை நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய மீனவளத்துறை இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் மீனவர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் தொடரப்பட்ட பொதுநல மனுவில், ‘மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை அதிகரிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்றம் வழக்கு தொடர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். அப்போது, ‘தமிழக மீனவர்களின் நலன் காக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டே ஐகோர்ட்டு உத்தரவிட்டும், எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை’ என்று மனுதாரர் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் மீன்வள மேலாண்மைக்காக ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முயற்சியால் கடந்த 2014 முதல் தற்போது வரை இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 மீனவர்களும், 381 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் நலன் காக்கும் வகையில் கூட்டு பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை மற்றும் இந்தியா இடையே ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சாதாரண படகுகளை ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளாக மாற்றுவதற்கு ரூ.15 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் மேம்பாட்டுக்காக நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ரூ.300 கோடி வழங்கியதாக மத்திய அரசு தன் பதில் மனுவில் கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த வழக்கு தொடரப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பதில் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை.
எனவே, மத்திய அரசு வழங்கிய ரூ.300 கோடி எந்த வகையில் செலவு செய்யப்பட்டது?. இந்த தொகை எந்த தேதியில் வாங்கப்பட்டது? நீலப்புரட்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் பலன் அடைந்துள்ள மீனவர்கள்?, அவர்களின் குடும்பத்தினர் விவரங்களையும், இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் குறித்தும் விரிவான அறிக்கையை மீன்வளத்துறை இயக்குனர் வருகிற 16-ந் தேதி நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story