குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன - ஐகோர்ட்டு கேள்வி


குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன - ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 3 March 2020 5:00 AM IST (Updated: 3 March 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அதிகளவில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதாகவும், இப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சேலத்தை போலவே சென்னையிலும் சில இடங்களில் தொடர்ந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் நிலை என்ன? என்பது குறித்து தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story