தொழிலாளர் காப்பீட்டு சட்டம் தொடர்பான வழக்கு: 3 பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வில் விசாரணை
தொழிலாளர் காப்பீட்டு சட்டம் தொடர்பான வழக்கு இன்று 3 பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
சென்னை,
கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் பொருந்தும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்றும், மற்றொரு அமர்வு தமிழக அரசு உத்தரவை அமல்படுத்த அனுமதித்தும் உத்தரவிட்டனர்.
இரண்டு அமர்வுகள், இருவேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால், தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா? பொருந்தாதா? என்பதை முடிவு செய்ய 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமைத்து உத்தரவிட்டார்.
இந்த முழு அமர்வில் பெண் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோரை தலைமை நீதிபதி நியமித்தார். சர்வதேச மகளிர் தினம் வருகிற 8-ந்தேதி கொண்டாட உள்ள நிலையில், இந்த முழு அமர்வில் 3 பெண் நீதிபதிகள் இடம் பெற்றது பல தரப்பில் இருந்தும் வரவேற்கப்பட்டது.
இந்த நீதிபதிகள் இந்த வழக்கை நேற்று விசாரித்தனர். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் என்று பலர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story