வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது: மாநிலங்களவை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம்


வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது: மாநிலங்களவை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம்
x
தினத்தந்தி 4 March 2020 9:00 PM GMT (Updated: 4 March 2020 9:11 PM GMT)

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் இடங்கள் கேட்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திருச்சி சிவா, முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல், 26-ந்தேதி நடைபெறவுள்ளது. 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் உள்ள கட்சிகளின் பலத்தின்படி, அ.தி.மு.க. 3 உறுப்பினர்களையும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க 3 உறுப்பினர்களையும் மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். அந்தவகையில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மீண்டும் திருச்சி சிவாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரை வேட்பாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க.வில் மாநிலங்களவை எம்.பி. பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது. கூட்டணி கட்சிகளாக தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளும் தங்களுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. தே.மு. தி.க. வெளிப்படையாகவே இந்த கருத்தை முன்வைத்தது.

எப்படியாவது அ.தி.மு.க. கூட்டணியில் மாநிலங்களவை எம்.பி. பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தே.மு.தி.க. ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை, எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை வழங்குவது குறித்து உறுதி எதுவும் கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது.

த.மா.கா. சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கும், புதிய நீதிக்கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகத்திற்கும் மாநிலங்களவை எம்.பி. கேட்கப்பட்டு வருகிறது. இதுதவிர அ.தி.மு.க.வில் முக்கிய தலைவர்கள் மாநிலங்களவை எம்.பி. பதவியை கைப்பற்ற கட்சி தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து அறிவிப்பதில் அ.தி.மு.க. தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மாநிலங்களவைக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்க உள்ளது.

Next Story