கடந்த 3 ஆண்டுகளில் ரெயில் நிலையங்களில் குப்பை வீசிய பயணிகளுக்கு ரூ.4 கோடி அபராதம்
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் குப்பை வீசிய 1.84 லட்சம் பயணிகளுக்கு ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியா முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் விதமாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன்மூலம் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுகாதாரக்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அந்தவகையில் அனைத்து ரெயில் நிலையத்திலும் பயணிகளிடையே தூய்மை இந்தியா திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. மேலும் ரெயில் நிலையத்தில் குப்பைகளை கொட்டினால் ரெயில்வே பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டது.
தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் துப்புரவு ஊழியர்கள் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை அரைத்து பொடியாக்கும் எந்திரங்களை பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே அமைத்துள்ளது.
ரெயில் நிலைய வளாகத்தில் பயணி ஒருவர் குப்பையை வீசினால் அவருக்கு ரெயில்வே பாதுகாப்புப்படையினர் அதிகபட்சமாக ரூ.500 அபராதம் விதிக்கின்றனர். ரெயில்வே சட்டப்படி அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டங்களிலும் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் குப்பைகளை வீசியவர்கள் மீது நடப்பு ஆண்டு ஜனவரி வரை கடந்த 3 ஆண்டுகளில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் விதித்துள்ள அபராதம் விவரம் வருமாறு:-
கடந்த 2017-ம் ஆண்டில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசிய 47 ஆயிரத்து 441 பயணிகளிடம் இருந்து ரூ.95 லட்சத்து 39 ஆயிரத்து 820 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் 74 ஆயிரத்து 779 பயணிகளிடம், ரூ.1 கோடியே 65 லட்சத்து 32 ஆயிரத்து 410-ம், 2019-ல் 57 ஆயிரத்து 878 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரத்து 450-ம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரை கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 773 பயணிகளை பிடித்து ரூ.4 கோடியே 1 லட்சத்து 74 ஆயிரத்து 880 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story