காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம்: மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாசுக்கு 14-ந்தேதி பாராட்டு விழா


காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம்: மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாசுக்கு 14-ந்தேதி பாராட்டு விழா
x
தினத்தந்தி 5 March 2020 3:15 AM IST (Updated: 5 March 2020 2:52 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் அமைய போராடிய டாக்டர் ராமதாசுக்கு மயிலாடுதுறையில் விவசாய அமைப்புகள் சார்பில் 14-ந்தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதுகுறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

காவிரி பாசன மாவட்டங்களின் 4½ ஆண்டு பெருங்கனவு வெற்றிகரமாக நனவாகியிருக்கிறது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றால், அந்த கனவு நிறைவேற அனைத்து வழிகளிலும் அடிப்படையாக இருந்தவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான்.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் வலியுறுத்திய அரசியல் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் தான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க 10 கோரிக்கைகளை முன்வைத்த டாக்டர் ராமதாஸ், அந்தக் கோரிக்கைகளில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்வதை முதல் கோரிக்கையாக இடம் பெறச்செய்தார்.

டாக்டர் ராமதாசின் இடைவிடாத வலியுறுத்தல் காரணமாகவே காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4½ ஆண்டுகளுக்கு முன் பா.ம.க. உருவாக்கிய இக்கோரிக்கையை சாத்தியமாக்கிய பெருமை அவரையே சேரும். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கிக்கொடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு விவசாய அமைப்புகளின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வருகிற 14-ந்தேதி பாராட்டு விழா நடைபெறும். விழாவில் டாக்டர் ராமதாசுடன், நான் (டாக்டர் அன்புமணி ராமதாஸ்), பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொள்வர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story