பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது: மொழிப்பாடம் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று நடந்த மொழிப்பாடம் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
சென்னை,
2019-20-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ், பிரெஞ்சு, இந்தி, உருது, தெலுங்கு உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 16 தேர்வு மையங்களில், 4 லட்சத்து 43 ஆயிரத்து 691 மாணவிகள், 3 லட்சத்து 88 ஆயிரத்து 783 மாணவர்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். சென்னை மாநகரில் மட்டும் 46 ஆயிரத்து 779 மாணவர்கள் எழுதினார்கள்.
நேற்று காலை 9.30 மணியில் இருந்து தேர்வர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகள் கையில் தேர்வுக்கான உபகரணங்களை தவிர வேறு பொருட்களை எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் சோதனை செய்து அனுப்பினார்கள்.
முன்னதாக தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் அறை வளாகத்தில் பிரார்த்தனை செய்தனர். காலை 10 மணியில் இருந்து 10 நிமிடத்துக்கு வினாத்தாள் வாசிக்கவும், அதற்கு அடுத்த 5 நிமிடம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் விடைத்தாளில் சுயவிவரங்கள் சரிபார்க்கவும் மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன்பின்னர், காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி, பிற்பகல் 1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை விதித்து இருந்தது.
தேர்வர்கள் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக அடித்து இருந்தால் அது ஒழுங்கீன செயலாக கருதப்படும் என்றும், அவருடைய தேர்வு முடிவு நிறுத்தப்பட்டு அடுத்து வரும் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்றும் பள்ளி அறிவிப்பு பலகையில் மாணவர்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தது.
நேற்று நடந்த மொழிப்பாடங்களுக்கான தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களை தவிர, மற்ற வினாக்கள் அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டு இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். ஆங்கில பாடத்துக்கான தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story