கோவில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவது ஏன்? - வானதி சீனிவாசன் விளக்கம்


கோவில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவது ஏன்? - வானதி சீனிவாசன் விளக்கம்
x
தினத்தந்தி 4 March 2020 11:00 PM GMT (Updated: 4 March 2020 10:39 PM GMT)

கோவில்களை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்துவது ஏன்? என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

சென்னை கமலாலயத்தில், பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் திரும்ப திரும்ப அறிக்கை விடுவது மட்டும் அல்ல, ஆங்காங்கு முஸ்லிம்களை போராடவும் தூண்டி வருகின்றனர். போலீஸ் அனுமதி அளிக்கப்படும் இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டம் நடத்துவது வழக்கம். அனுமதி அளிக்காத இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டால், அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்படுவதும் வழக்கம்.

ஆனால், எங்களுக்கு விருப்பப்பட்ட இடத்தில் நாங்கள் போராடுவோம், அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் போலீசார் எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சொல்வதும், போலீசாரே சில இடங்களில் தாக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது. அத்தகையவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டுமா? காவல்துறை தனது அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டுமா? என்பது குறித்த அக்கறை இல்லாமல் மு.க.ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகள் தமிழகத்தில் அவர் அமைதியை விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது. சட்டமன்ற தேர்தல் வரை தமிழகத்தை போராட்ட களமாக வைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரும்புகிறார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடர்ச்சியாக வருகிற 20-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை ‘ஊருக்கு செல்வோம், உண்மையை சொல்வோம், உரக்கச் சொல்வோம்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். அதற்காக மாவட்டம் வாரியாக மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு குழுவிலும் தலா 5 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

மேலும், சமுதாயத் தலைவர்கள், துறவிகள், ஆதீனங்களை சார்ந்தவர்களை சந்திப்பதற்காக மாநில துணைத்தலைவர் குப்புராம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. எங்கெங்கெல்லாம் இணக்கமான சூழல் நிலவுகிறதோ? அங்குள்ள முஸ்லிம் தலைவர்களுடனும் பேசுவதற்கு பா.ஜனதா தயாராக இருக்கிறது.

கோவில்கள் எல்லாம் கொடியவர்களின் கூடாரம் என்று கூறிய தி.மு.க., திராவிட கழகத்தினர் தமிழக கோவில்களை பற்றி கவலைப்படுவது குறித்து ஒருபக்கம் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், தமிழக கோவில்களின் நிலங்களை எடுத்த பரம்பரை எதிரிகள் யார்? கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட நகைகளை எல்லாம் எடுத்த பரம்பரை எதிரிகள் யார்? கோவில்களில் பூஜை செய்பவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியாத சூழலை கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்படுத்திய பரம்பரை எதிரிகள் யார்? என்று மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினால் வசதியாக இருக்கும்.

மத்திய அரசாங்கம் தமிழர்களின் நாகரிகத்தை, தொன்மையை, கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் நடவடிக்கை எடுக்கிறது. கோவில்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவிலில் உள்ள சின்னங்கள் அழியாமல் இருக்கவும்தான் கோவில்களை தொல்லியல்துறை எடுக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ரஜினி தனது கருத்தை தெளிவாக கூறியிருக்கிறார். எனவே, முஸ்லிம் தலைவர்கள் அவரை சந்தித்து இதுபோன்ற கருத்துகளை பேசுவதை நல்ல விஷயமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

பா.ஜனதா அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அதை விசாரிப்பார்கள். விருதுநகரில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது குறித்து அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன் பேசினேன். அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story