குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை - போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீஸ் அனுமதியின்றி நடத்தப்படும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘திருப்பூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர்கள் மீது இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபிறகும் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்த அனுமதிப்பது ஏன்?, எதற்காக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை?. திருப்பூரில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசாரை தடுப்பது எது? என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபிறகும், அங்கு தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்த அனுமதிக்கும் போலீசாரின் இந்த அணுகுமுறையை ஏற்க முடியாது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எந்த தடையும் இல்லை. வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நோக்கமே, சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டத்தை தடுப்பதற்குதான். போராட்டம் நடத்துவதற்கு பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. அதேநேரம், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை மறித்து போராட்டம் நடத்துவதற்கும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவற்கும் வித்தியாசம் உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு போராட அனுமதித்தால் அது மோசமான பேராபத்தை ஏற்படுத்திவிடும்.
எங்களை பொறுத்தவரை போராட்டத்துக்கான காரணத்தை பார்க்கவில்லை. இந்த போராட்டத்தால் ஏற்படுகின்ற பாதிப்பைத்தான் பார்க்கிறோம். ஏற்கனவே, இந்த போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் விரிவான உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
திருப்பூரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அனுமதியின்றி குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் எந்தவொரு போராட்டமும் நடத்த போலீசார் அனுமதி அளிக்கக்கூடாது. மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வக்கீல்கள் சிலர் ஆஜராகி, ‘இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story