‘பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வு சற்று கடினமாக இருந்தது’ - மாணவ-மாணவிகள் கருத்து
பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
சென்னை,
பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கு கடந்த 2-ந்தேதி தேர்வு தொடங்கியது. மொழிப் பாடத்தேர்வு எளிதாக இருந்த நிலையில், நேற்று ஆங்கில பாடத்தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடந்தது.
இந்த தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
துணைப்பாட பகுதியில் இருந்து எதிர்பார்த்த வினாக்கள் எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தோம். அதேபோல், பாடல் (‘போயம்’) பகுதியில் கேட்கப்பட்ட வினா வித்தியாசமாக இருந்தது. அதை புரிந்து கொள்ள சிரமப்பட்டோம். மேலும், 5 மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரையில் எப்போதும் கேட்கப்பட்டும் ஒரு வினா, இந்த முறை கேட்கவில்லை. ஆனால் அதை நாங்கள் முழுவதுமாக படித்து இருந்தோம். அந்த வினா வராதது பெரிய ஏமாற்றம். மொத்தத்தில் வினாக்கள் சற்று கடினமாகவே கேட்கப்பட்டு இருந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம் சில மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் வினாக்கள் ஓரளவு எளிதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த இந்த தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒருவர் என 2 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர். இவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் ஆவார்கள்.
Related Tags :
Next Story