கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம் “ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்?” - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி


கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம் “ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்?” - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 6 March 2020 5:30 AM IST (Updated: 6 March 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்தேன். ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என்று ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லம் சென்றார். போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு கட்சி தொடங்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எப்போது புதிய கட்சி தொடங்கப்படும்? எப்போது இதனை அறிவிப்பீர்கள்?

பதில்:- அதைப்பற்றி பேசுவதற்காகத்தான் ஒரு ஆண்டுக்கு பிறகு மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித் தேன். அவர்கள் என்னிடம் நிறைய கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு நான் பதில் அளித்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு மிகவும் திருப்தி கிடைத்திருக்கிறது. ஆனா ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தி கிடையாது. அந்தவகையில் எனக்கு ஏமாற்றம் தான். அது என்னவென்று? நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்.

கேள்வி:- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன ஏமாற்றத்தை நீங்கள் உணர்ந்தீர்கள்?

பதில்:- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்னென்ன பேசினோம்? என்பதை வெளியே சொல்லமுடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம். அதை நேரம் வரும்போது சொல்கிறேன்.

கேள்வி:- சமீபத்தில் முஸ்லிம் மதகுருமார்களை சந்தித்து தேசிய குடியுரிமை சட்டம் பற்றி பேசினீர்கள். அதைப்பற்றி சொல்லுங்களேன்...

பதில்:- அது மிகவும் ஒரு இனிமையான சந்திப்பு. முதலில் அவர்கள் மிகவும் வற்புறுத்தியது ‘சகோதரத்துவம், அன்பு, அமைதி நாட்டில் நிலவவேண்டும். அதற்கு என்ன செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்களும் உறுதுணையாக இருக்கவேண்டும்’, என்றார்கள்.

‘நான் நிச்சயம் அதற்கு உறுதுணையாக இருப்பேன். நீங்களும் தேசிய குடியுரிமை சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் என்னென்ன மாற்றங்கள் உள்ளது? என்பது குறித்து அரசியல்வாதிகள் அல்ல, மதகுருமார்களான நீங்கள் ஆலோசித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினால் அது நல்ல மரியாதையாகவும் இருக்கும். அவர்களும் நமது கருத்தை கேட்பார்கள். என்னால் முடிந்த அளவு அதற்கு நானும் உதவி செய்கிறேன்’, என்று கூறினேன்.

கேள்வி:- தமிழக அரசியல் வெற்றிடம் உள்ளது என்று கூறியிருந்தீர்கள். அந்த வெற்றிடத்தை நீங்களும், கமல்ஹாசனும் இணைந்து பூர்த்தி செய்ய வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அதற்கு நேரம் தான் பதில் சொல்லும்.

மேற்கண்டவாறு ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

Next Story