குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கே.எம்.காதர் மொய்தீன் பேட்டி


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கே.எம்.காதர் மொய்தீன் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2020 8:45 PM GMT (Updated: 6 March 2020 8:24 PM GMT)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை, 

டெல்லியில் நடந்த வன் முறையில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிதி திரட்டி வருகிறோம். வன்முறையில் உயிரிழந்தவர்களில் 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் கொடுத்திருக்கிறோம். இதில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள்.

பொருளாதார மந்தநிலை, நிர்வாக தோல்வி உள்ளிட்டவற்றை மறைப்பதற்காகவே குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களை போட்டு திசை திருப்புகிறார்கள். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகளே கேட்கப்படும் என்றும் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவேண்டும். டெல்லியில் ரூ.50 கோடி செலவில் எங்கள் கட்சிக்கு புதிய அலுவலகம் திறக்க உள்ளோம். வருகிற 10-ந் தேதி எங்கள் கட்சியின் 73-வது நிறுவன நாள் ஆகும். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கட்சி கொடி ஏற்றி, மதச்சார்பின்மையை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story