தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்


தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
x
தினத்தந்தி 8 March 2020 6:48 AM GMT (Updated: 8 March 2020 6:48 AM GMT)

தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அந்த நாட்டை மட்டுமின்றி அகில உலகையும் பெரும் அல்லலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போது அவர் சென்னை அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன.  மஸ்கட்டில் இருந்து வந்த 27 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

60 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஓமனிலிருந்து வந்த நபரை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி இல்லை. தேனியில் புதிதாக ரத்த பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story