மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு


மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 8 March 2020 9:00 PM GMT (Updated: 8 March 2020 6:01 PM GMT)

தமிழகத்தில் மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

சென்னை, புரசைவாக்கம், வ.உ.சி. நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் மின் மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கஜேந்திரன் என்பவரது மகன் வின்சென்ட் மற்றும் ரங்கன் மகன் உதயகுமார் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி பலியாயினர்.

சென்னை, சூளைமேட்டை சேர்ந்த ஜேம்ஸ் மனைவி லீமாரோஸ் மின்சார வயரில் ஏற்பட்ட தீ விபத்தில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மதுரை, சிலைமான் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் நைனாங்குளம் கிராமத்தை சேர்ந்த கருப்பையன் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். தென்காசி மாவட்டம் ராயகிரியை சேர்ந்த சுரேஷ் மின்சாரம் தாக்கி இறந்தார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி, இக்கலூர் கிராமத்தை சேர்ந்த நஞ்சுண்டசாமி மின்சாரம் தாக்கி இறந்தார். ஈரோடு மாவட்டம் லக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் அவிரியூரை சேர்ந்த அருள் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி பலியானார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா, வைப்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் லோகேஷ் விளையாடிக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளையை சேர்ந்த சந்திரகுமார் மின்மாற்றியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி இறந்தார்.

கடலூர் மாவட்டம் கொரக்கவாடியை சேர்ந்த சரவணன் மின்கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்காடு கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் தனது விவசாய நிலத்தில் பாம்பு கடித்து உயிரிழந்தார். சென்னை, கே.கே. நகர் கன்னிகாபுரத்தை சேர்ந்த பழனி மனைவி சுமித்ரா பாம்பு கடித்து இறந்தார். தென்காசி மாவட்டம் மருதாத்தாள்புரம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் அஜீதா பாம்பு கடித்து பலியானார்.

இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த 15 பேர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story