இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை


இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 8 March 2020 9:45 PM GMT (Updated: 8 March 2020 8:04 PM GMT)

இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

கண்ணீரும், புன்னகையும் மாறிமாறிப் பயணிக்கும் வாழ்க்கையிலும், வெற்றியும், தோல்வியும் அடுத்தடுத்து ஏற்படும் இயக்கத்திலும், எந்தச் சூழலையும் சமமான மனநிலையுடன் அணுகும் அதிசயிக்கத்தக்க ஆற்றல் வாய்ந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், 98 வயதில் தன் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்; நம்மையெல்லாம் கண்ணீரில் மிதக்கவிட்டுச் சென்றிருக்கிறார்.

நிறை வாழ்வு கண்டவர்; கண்டு இனத்திற்கும் மொழிக்கும் மிகுபயன் விளைத்தவர் பேராசிரியர் க.அன்பழகன். முதுமையினால் ஏற்படும் உடல்நலக்குறைவினால் அவர் முடிவெய்தினார் என்றாலும், இன்னும் சில ஆண்டுகள் அவர் இருந்திருக்கக்கூடாதா, நூற்றாண்டு வயது கண்ட திராவிட இயக்கத்தின் தலைவர்களில் நூறாண்டு கண்ட ஒரே தலைவர் என்ற பெருமையையும், வாழ்த்துகளையும் நம் அனைவருக்கும் வழங்கி, தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் மாட்சிமை கண்டு பெருமிதம் கொண்டு, அதனை வழிநடத்தும் முறைகளை நமக்குக் கற்றுத்தரும் அந்தத் தத்துவப் பேராசிரியரை, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இழக்கச் சம்மதிப்போமா?

தலைவர் கருணாநிதி உடல்நலன் குன்றிய நேரத்திலும், பேராசிரியர் அன்பழகன் சந்திக்க வந்துவிட்டால், புதிய உற்சாகம் பெற்று, இளமைக்கால நினைவுகளுடன் இயக்கம் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் இருவரும் மூழ்கியதையும் நேரில் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். தன்னைவிட வயதில் மூத்த தன் வயதுக்கு இணையான தலைவர்களுடன் மட்டுமல்ல, தன்னைவிட வயதில் மிகவும் இளையவர்களிடமும் அதே அன்பை அள்ளி வழங்கியவர் அன்பழகன்.

அந்த அன்பை அவரிடம் இருந்து அதிகமாக பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தன் பெயரில் உள்ள அன்பை என்னிடம் கொடையாக வார்த்த அவர் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றைத்தான். அது, தி.மு.க. எனும் லட்சியக் கோட்டையைக் கட்டிக் காத்திடும் கடின உழைப்பு வலிமைமிகு உழைப்பு.

தி.மு.க. எனும் லட்சியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக ஒவ்வொரு பொறுப்பினைப் பெற்றபோதும், அவரின் வாழ்த்துகள் எனக்கு ஊக்கமும் உரமுமாக அமைந்தன. சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, ஒவ்வொன்றாகப் பொறுப்புகளை சுமந்த காலத்திலும் பேராசிரியர் க.அன்பழகனின் ஆலோசனைகளை கேட்டு, செயலாற்றி, அவரது அன்பான வாழ்த்துகளைப் பெறத் தவறியதில்லை.

தி.மு.க.வின் தலைமைப் பொறுப்புக்கு உங்களில் ஒருவனான நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் பேராசிரியர் அன்பழகனின் வாழ்த்துகள், தலைவர் கருணாநிதி இல்லாத சூழலில் அந்த குறை தெரியாதபடி செய்தன. தலைவர் கருணாநிதிக்கு உடன்பிறந்த அண்ணன் இல்லை. ஆனால், அவரது ‘உடன்பிறப்பான’ அண்ணனாக பேராசிரியர் அன்பழகன் இருந்தார். தலைவர் கருணாநிதியின் மகனான எனக்கு பெரியப்பா இல்லை. பேராசிரியர் தான் பெரியப்பா என்ற நிலையில் பெரும் பாசத்துடன் அரவணைத்து, ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்கி, வழிநடத்தினார்.

அப்பாவையும், பெரியப்பாவையும் இரண்டாண்டு இடைவெளிக்குள்ளாக அடுத்தடுத்து இழந்த நிலையில், இயற்கை பறித்துக்கொண்ட சதியால், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட வகையிலும் கலங்கி நிற்கிறேன். உங்களில் ஒருவனான நான் மட்டுமல்ல, ஒரு கோடிக்கும் மேலான உறுப்பினர்களை கொண்ட தி.மு.க.வின் தொண்டர்கள் அனைவருமே உயிரும், உடலும் கலங்கித்தான் நிற்கிறோம்.

யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிடம் யார் தேறுதல் பெறுவது? என்று தெரியாத நிலையில், நமக்கு நாமே ஆறுதலாகவும், நம்மை நாமே தேற்றிக்கொண்டும், அன்பழகன் வாழ் நாளெல்லாம் எண்ணிய வழியில், லட்சியச் சுடரை ஏந்திச் செல்வதுதான், நம் முன் உள்ள முக்கியக் கடமையாகும்.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் பண்புடன் பழகிய அவருக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்- அமைச்சர், நேரில்வந்து மரியாதை செலுத்திய துணை முதல்-அமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர், தி.மு.க.வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், ஓய்வுப் பெற்ற உயர் அதிகாரிகள், மற்ற கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தமிழறிஞர்கள், பொதுநல ஈடுபாடு கொண்டோர், கலையுலகத்தினர், வணிகத்துறையினர், பலதுறைகளையும் சார்ந்த சான்றோர்கள் அனைவருக்கும் தி.மு.க. என்கிற அரசியல் குடும்பத்தின் தலைவன் என்ற முறையில், கண்ணீர் கலந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

திராவிடச் சிகரமாக, இனமான இமயமாக உயர்ந்து நிற்கும் உங்கள் புகழினைக் கட்டிக்காத்திடும் வகையில், நீங்கள் வழங்கிய ஆலோசனைகளோடும், தலைவர் கருணாநிதியின் தொண்டர்களோடும் லட்சியப் பாதையில், எங்கள் பயணம் தொடரும். தமிழ், இனம், மொழி, பண்பாடு காக்கும் திராவிட இயக்கத்தின் சளைக்காத நெடும்பயணத்தை நீங்கள் தந்த சுடரினை ஏந்தி, அந்தச் சுடரொளியில் தொடர்ந்திடுவோம். பெறப்போகும் வெற்றி மலர்களை, தலைவர் கருணாநிதிக்கும், பேராசிரியர் அன்பழகனுக்கும் காணிக்கையாக்கிடுவோம். இது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story