தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. அன்று 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 4 நாட்கள் விவாதம் நடந்து முடிந்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் குறித்து ஆய்வு நடத்த, சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் கடந்த 2-ந் தேதி நடந்தது. அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வை மார்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை 23 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அவை கூடியதும், பேரவையில், முன்னாள் உறுப்பினர் சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பேராசிரியர் க.அன்பழகன், மொழி உரிமைக்காகப் போராடியவர்; ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற உதவியவர் என்று சபாநாயகர் தனபால் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை மீண்டும் புதன்கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது.
Related Tags :
Next Story