ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வரும் திருவண்ணாமலையை சேர்ந்த கண்ணகிக்கு ‘அவ்வையார் விருது’ - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வரும் திருவண்ணாமலையை சேர்ந்த கண்ணகிக்கு ‘அவ்வையார் விருது’ - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 10 March 2020 4:30 AM IST (Updated: 10 March 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வரும் திருவண்ணாமலையை சேர்ந்த கண்ணகிக்கு அவ்வையார் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை, 

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழி தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம், சமூகத்திற்கு தனித்துவமான பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கவுரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘அவ்வையார் விருது’ என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை வழங்கப்படும் என்றும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் ‘அவ்வையார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரா.கண்ணகி 1992-ம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப்பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து தொண்டாற்றி வருகிறார். 350-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றுவதற்கு பெரும் பங்காற்றியுள்ளதோடு, மகளிர் சுயஉதவிக்குழுக்களை அமைப்பதிலும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

மேலும் கடந்த 12 ஆண்டு களாக திருவண்ணாமலை நகராட்சி வார்டு 16-ல் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஊக்கப்படுத்துபவராக பணியாற்றி, 528 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வருவதோடு, விழுதுகள் என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பையும் நடத்தி வருகிறார்.

தகன மேடைகளில் சடலங் களை எரிக்கும் பணி ஆண் களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதனை தகர்த்து, பெண்களாலும் அப்பணியை மேற்கொள்ள இயலும் என்பதை நிரூபிக்கும் வகையில், துணிச்சலுடன் கண்ணகி, திருவண்ணாமலை நகராட்சியில் எரிவாயு தகன மேடை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி இறுதி சடங்கை மேற்கொண்டுள்ளார். இவரின் தன்னலமற்ற சேவைகளுக்காக மாவட்ட அளவில், 2016-ம் ஆண்டின் மகளிர் தின விருது, 2018-ம் ஆண்டுக்கான குடியரசு தின விருது, மண்கழிவுகள் மேலாண்மைக்காக 2018-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான விருது பெற்றுள்ளார்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் சமூகசேவை புரிந்துவரும் ரா.கண்ணகியை கவுரவிக்கும் பொருட்டு, 2020-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் நேற்று ரா.கண்ணகிக்கு அவ்வையார் விருதுக்கான 1 லட்சம் ரூபாய்க் கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

அப்போது ரா.கண்ணகி, தனது சமூக சேவையை அங்கீகரித்து விருது வழங்கியமைக் காக எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.சரோஜா, சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் எஸ்.மதுமதி, சமூக நல கமிஷனர் த.ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story