கே.பி.பி.சாமி, காத்தவராயன் மறைவுக்கு இரங்கல்: சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு - அன்பழகனுக்கு சபாநாயகர் புகழாரம்


கே.பி.பி.சாமி, காத்தவராயன் மறைவுக்கு இரங்கல்: சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு - அன்பழகனுக்கு சபாநாயகர் புகழாரம்
x
தினத்தந்தி 10 March 2020 12:00 AM GMT (Updated: 9 March 2020 11:49 PM GMT)

க.அன்பழகன், கே.பி.பி. சாமி, காத்தவராயன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை, 

தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 9.57 மணிக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9.58 மணிக்கும் சட்டசபைக்கு வந்தனர்.

சட்டசபையில் நேற்று இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் ஆகிய நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்றன. முதலில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ப.சந்திரனின் மறைவு குறித்து சபாநாயகர் ப.தனபால் இரங்கல் குறிப்பை வாசித்தார்.

அதில், பெரணமல்லூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1977-80-ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக ப.சந்திரன் நன்றாக பணியாற்றினார் என்றும், கடந்த மாதம் 29-ந் தேதி அவர் மறைந்துவிட்டார் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

பின்னர், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ப.தனபால் வாசித்தார்.

அதில், கே.பி.பி.சாமி கடந்த 2006-11-ம் ஆண்டுகளில் மீன்வளத்துறை அமைச்சராக பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றினார். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்ற அவர் இனிய பண்பும், செயல் திறனும் கொண்டவர் என்று புகழ்ந்தார்.

எஸ்.காத்தவராயன் பற்றிய இரங்கல் தீர்மானத்தில், 2019-ம் ஆண்டு குடியாத்தத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எளிமை, இனிய பண்பு மற்றும் கடமை உணர்வு கொண்டவராக திறம்பட செயலாற்றியவர் என்று சபாநாயகர் ப.தனபால் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் மறைவு குறித்து சபாநாயகர் ப.தனபால் படித்த இரங்கல் தீர்மானம் வருமாறு:-

திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவரும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரோடு அரசியலில் பயணித்தவரும், பகுத்தறிவுக் கொள்கைகளை தன் இறுதி மூச்சுவரை சிறிதும் பிறழாமல் கடைபிடித்தவரும், சமூக நீதிக்காகவும், மொழி உரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவரும், 1957-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 9 முறை தமிழ்நாடு சட்டசபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட வரும்,

1962-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1969-1971 வரை திருச்செங்கோடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராகவும், இப்பேரவையில் அவை முன்னவராகவும், மக்கள் நலவாழ்வு, கல்வி, நிதி என துறைகளின் அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவரும், தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தொடர்ந்து பணியாற்றிய பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 7-ந் தேதியன்று மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

கல்லூரி பேராசிரியராக தன்னுடைய பணியைத் தொடங்கி, தமிழர் வாழ்வு, தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு, வரலாறு என பல்வேறு துறைகளை ஆழ்ந்து கற்று பல படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

அமைச்சராக, பேரவை முன்னவராக பேரவையில் விவாதங்களில் சூடுபறக்கும்போது தன்னுடைய ஆணித்தரமான கருத்துகளை மற்றவர்களும் ஏற்கும் வண்ணம் தெரிவித்து, இப்பேரவையை அமைதிப்படுத்தி, ஜனநாயக முறையில், விதிமுறைப்படி, மரபுப்படி பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற பெரிதும் உதவியவர் அவர்.

பேரவையின் மாண்பும், சிறப்பும், உயர்வும் எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதி கொண்டவர். அவையில் விவாதம் திசை மாறிச்செல்கையில், அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களே ஆனாலும்கூட அதை ஒருநாளும் பேராசிரியர் அனுமதித்தது இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், மறைந்த எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையம், அனுதாபத்தையும் பேரவை தெரிவித்துக்கொள்வதாக சபாநாயகர் ப.தனபால் குறிப்பிட்டார். இரங்கல் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 2 நிமிடங்கள் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன் பின்னர் வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story