கொரோனா வைரஸ் பாதிப்பு; என்.எல்.சி.யில் பயோமெட்ரிக் முறைக்கு தற்காலிக தடை


கொரோனா வைரஸ் பாதிப்பு; என்.எல்.சி.யில் பயோமெட்ரிக் முறைக்கு தற்காலிக தடை
x
தினத்தந்தி 10 March 2020 8:55 PM IST (Updated: 10 March 2020 8:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நெய்வேலி என்.எல்.சி.யில் பயோமெட்ரிக் முறைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடலூர்,

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து 104 நாடுகளில் பரவியுள்ளது.  சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,136 ஆக உள்ளது.  உலக அளவில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 28 ஆக உள்ளது.  இதேபோன்று உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 549 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நேற்று வரை 45 ஆக உயர்ந்திருந்தது.  தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து இன்று 57 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

டெல்லியில் 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, டெல்லியில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள பயோமெட்ரிக் வருகை முறைக்கு தற்காலிக தடை விதிக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதேபோன்று, தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வரும் 31ந்தேதி வரை பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு செய்ய வேண்டாம் என பள்ளி கல்வித்துறை நேற்று உத்தரவிட்டது.

இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், அரசு பள்ளி ஊழியர்களும், ஆசிரியர்களும் வருகை பதிவேடு மூலம் வருகையினை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும்.  காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கடலூர் நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி உற்பத்தி நிறுவனத்தில் (என்.எல்.சி.) பயோமெட்ரிக் முறைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story