என்.பி.ஆர் விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு


என்.பி.ஆர் விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 March 2020 12:00 PM IST (Updated: 11 March 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

என்.பி.ஆர் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

சென்னை,

என்.பி ஆருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார். 

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் இவ்விவகாரம் குறித்துப் பேசிய மு.க ஸ்டாலின், “ பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பாஜக கூட்டணி கட்சிகள் கூட, என்.பி.ஆர்.-க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  ஏப்ரல் 1ஆம் தேதி பணி தொடங்கும் நிலையில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள். என்.பி.ஆர் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது” என்றார். 

தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த தமிழக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார்,  “தமிழக அரசின் கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை” என்றார்.  

மேலும், என்.பி.ஆர்-க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.  இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Next Story