தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்ட எல். முருகனுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து
தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள எல். முருகனுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ந்தேதியில் இருந்து அந்த பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக எல். முருகன் நியமனம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பினை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று வெளியிட்டார். இதுபற்றி எல். முருகன் கூறும்பொழுது, தன் மீது பா.ஜ.க. தலைமை வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த 15 வருடங்களாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவரான அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார். இந்த நியமனம் பற்றி பேசிய மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், எல். முருகனுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. சந்தித்தது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள எல். முருகனுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று வானதி சீனிவாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர் திரு.L. முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள். தமிழ் நாட்டில் பா.ஜ.க. மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை! என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story