கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கிறிஸ்தவ ஆராதனையில் புதிய கட்டுப்பாடுகள் - ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி அறிவிப்பு


கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கிறிஸ்தவ ஆராதனையில் புதிய கட்டுப்பாடுகள் - ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2020 3:00 AM IST (Updated: 12 March 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிறிஸ்தவ ஆராதனையின்போது புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்துக்குட்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு, ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி ஒரு சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சீனாவில் தொடங்கி கடந்த 2 மாதங்களாக உலக நாடுகளையே அச்சுறுத்துகின்ற உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கம் தொடர்பாகவும், இந்த நோயிலிருந்து நம்மையே பாதுகாத்துக்கொள்ள கவனத்தில் இருக்கவேண்டிய சில அடிப்படையான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை பல்வேறு தரப்புகளில் வழங்கப்பட்டுள்ள விழிப்புணர்வு நாம் அனைவரும் அறிந்ததே.

முதலில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நமது உருக்கமான ஜெபங்களில் நினைவுகூறுகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக உலகளவிலும், பல் வேறு தல திருஅவைகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற சில தற்காப்பு செயல்பாடுகளை நாமும் கவனத்தில்கொண்டு அவ்வாறு நடந்துகொள்வது அவசியமானதாகும்.

மக்கள் அதிகம் கூடும் திருவழிபாட்டு நிகழ்வுகளில் இத்தவக்காலம் முழுவதும் கீழ்க்காணும் சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

* வாழ்த்து கூறுவதற்கும், அமைதியை பகிர்வதற்கும் கைகுலுக்குவதற்கு பதிலாக வழக்கமான முறையில் வணக்கம் செலுத்துவதை வலியுறுத்துவதே நல்லது.

* திவ்ய நற்கருணையை கையில் மட்டும் வழங்கலாம்.

* நற்கருணையை வழங்கும் திருப்பணியாளர்கள் தங்களது கைகளை கழுவிய பின்னர் வழங்குவது வரவேற்கத்தக்கது.

* பெரிய வெள்ளிக்கிழமையன்று திருச்சிலுவை ஆராதனையின்போது, வழக்கமாக முத்தம் செய்வதற்கு பதிலாக, ஒவ்வொருவராக வரிசையில் வந்து பக்தியோடு வணங்கி ஆராதித்துவிட்டு செல்வது பரிந்துரைக்கப்படுகிறது.

* ஆலய வாயில்களில் வைக்கப்பட்டுள்ள தீர்த்த கலசங்களை காலியாக வைப்பது நல்லது.

* திருப்பலி அல்லாத ஏனைய அன்பிய கூட்டங்கள், குழு ஜெபங்கள் ஆகியவற்றில் பங்கேற்கும் மக்கள் உடல்நலனை கருத்தில்கொண்டு அடிக்கடி தங்களுடைய கைகளை கழுவுவது சிறந்தது.

மேற்குறிப்பிடப்பட்ட சில பரிந்துரைகள் நமது உடல்நலனை காத்துக்கொள்ளவும், கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவும் என நம்புகிறேன். சென்னை மாநகரை பொறுத்தவரை கொரோனா தொற்று பரவுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை எனினும் ‘வரும்முன் காப்பது’ சிறந்ததாகும். எல்லாவற்றுக்கும் மேலாக தேவையற்ற அச்சத்தையும், கலக்கத்தையும் விடுத்து இறைபராமரிப்பில் நம்பிக்கை கொண்டு அனைவருக்காகவும் இறைவனின் இரக்கத்தை மன்றாடுவோம்.

பெரிய வியாழன் பாதம் கழுவும் சடங்கின்போதும், பாஸ்கா திருவிழிப்பு சடங்கின்போதும் தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் இனிவரும் நாட்களில் கொரோனா தொற்றின் வீரியத்தை பொறுத்து மறைவட்ட அளவில் கலந்து ஆலோசித்து மற்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story