புதுச்சேரி முதல்-அமைச்சரும், கவர்னரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு


புதுச்சேரி முதல்-அமைச்சரும், கவர்னரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 March 2020 9:45 PM GMT (Updated: 11 March 2020 9:08 PM GMT)

புதுச்சேரி முதல்-அமைச்சரும், கவர்னரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘அமைச்சரவை வழங்கும் அறிவுரையின்படியே கவர்னர் செயல்பட வேண்டும். சட்டசபைக்கு உள்ள அதிகாரத்தை விட அதிகமான அதிகாரம் கவர்னருக்கு இல்லை’ என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், கவர்னர் கிரண்பெடியும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதிகள் பிறப்பித்தனர். 156 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி கவர்னருக்கு மத்திய அரசையும், மாநில அரசையும் ஒருங்கிணைக்கும் முக்கிய பங்கு உள்ளது. இரு அமைப்புக்கு இடையே அவர் பாலமாக செயல்பட வேண்டும்.

அதேபோல, அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் செயல்பட முடியும் என்பதை மாநில அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசின் முடிவில் மாறுபட்ட கருத்து இருந்தால், அதுகுறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க மத்திய அரசுக்குத்தான் கவர்னர் பரிந்துரைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஜனாதிபதியின் உத்தரவின்படி, மத்திய அரசு தான் இறுதி முடிவு எடுக்கும்.

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்-அமைச்சரும், புதுச்சேரி கவர்னரும் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story