பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும் - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி (திருமயம்) பேசினார். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பிளாஸ்டிக்கை 100 சதவீதம் ஒழிக்க முடியாது என்றும், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களிலாவது முழுமையாக ஒழிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், இந்தியா முழுவதுமே இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளது. 90 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலால் வருவாய்த் துறை அதிகாரிகள் முழு அளவில் அதில் ஈடுபட முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-
பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று கூறினார். அதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கமே அதை தடை செய்திருக்கிறது. இதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு முழுமையாக தேவை.
பல ஆண்டு காலமாக மக்கள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். உடனடியாக அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அத்தனை எளிதான காரியம் அல்ல. மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் தான், முழுமையாக இந்த பிளாஸ்டிக்கை தடை செய்ய முடியும். இருந்தாலும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட இந்த நெகிழி பொருட்களை அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கு உரிய முறையிலே நம்முடைய வருவாய்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள், உள்ளாட்சி துறை அதிகாரிகள் எல்லாம் நியமிக்கப்பட்டு, அவர்கள் ஆங்காங்கே கடைகளில் போய் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறார்கள். அபராதமும் விதிக்கப்படுகிறது.
இருந்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கினால் தான் முழுமையாக இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். அரசாங்கத்தை பொறுத்தவரைக்கும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி மட்டுமல்ல, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை பிரதேசங்களிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதை நடைமுறைப்படுத்த முடியாது.
இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் அரசு ஏற்படுத்தி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அனைத்து தரப்பு மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தந்தால்தான், அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
மலைகளுக்கு மட்டுமல்ல, அரசு போட்டுள்ள சட்டம் மாநிலம் முழுமைக்கும் பொருந்தும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்து இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் அரசு இதை செய்வதற்கு தயாராக இருக்கிறது. நெகிழி ஒழிப்பு என்பது மிக மிக முக்கியமானது.
முதன்முதலாக இந்தியாவிலேயே நாம்தான் இதை தடை செய்வதற்காக சட்டம் கொண்டு வந்து, நிறைவேற்றி இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story