மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று மீண்டும் சந்திப்பு - முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்


மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று மீண்டும் சந்திப்பு - முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்
x
தினத்தந்தி 12 March 2020 5:30 AM IST (Updated: 12 March 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

தனது அரசியல் நிலை குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்று(வியாழக்கிழமை)தெரிவிக்கிறார். முன்னதாக அவர் மாவட்ட செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, 

1996-ம் ஆண்டு முதல் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அவருடைய ரசிகர்கள் மிக தீவிரமான ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். ஆனால் இதுபற்றி ரஜினிகாந்த் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி நடைபெற்ற ரசிகர் மன்ற கூட்டத்தில், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை அறிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியல் பேச்சுக்கு பின்னர் அவரது ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. பின்னர் அரசியல் கட்சிகளை போன்று ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ரஜினிகாந்த் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அற்புதத்தை, அதிசயத்தை 100-க்கு 100 சதவீதம் தமிழக மக்கள் நிகழ்த்தப்போகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த 5-ந்தேதி, சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் மிக வெளிப்படையாக மாவட்ட செயலாளர்களிடம் பேசினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது உண்மை அல்ல என்பதை மாவட்ட செயலாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

இந்த கூட்டம் முடிந்து சரியாக ஒருவாரமே ஆன நிலையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

கடந்த கூட்டத்தில் ரஜினிகாந்த், ‘கட்சி பொறுப்பு தன்னிடமும், ஆட்சி பொறுப்பு நல்லவர் ஒருவர் கையில் ஒப்படைக்கப்படும் என்று கூறியதற்கு அவருடைய மன்ற மாவட்ட செயலாளர்கள் ஏற்க மறுத்து, அதிருப்தி தெரிவித்தனர்.

இந்தநிலையில் ‘தான் ஏன் அப்படிப்பட்ட முடிவு எடுத்தேன்? என்பது குறித்து ரஜினிகாந்த் இன்று நடைபெறும் கூட்டத்தில் விளக்கம் அளிக்க உள்ளார். தனது முடிவில் உள்ள நியாயமான அம்சங் களை எடுத்துக்கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டம் முடிந்தவுடன் ரஜினிகாந்த் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் காலை 10.30 மணிக்கு நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். அப்போது அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சியை இன்னும் அறிவிக்காவிட்டாலும், தொடங்காவிட்டாலும் அதற்குரிய பணிகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. அனைத்து பணிகளையும் அவர் திட்டமிட்டு தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

தற்போது அவருடைய 168-வது படமான ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 மாதங்களில் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் அவர் கட்சி பெயரை வெளியிடுவார் என்று தெரிகிறது.

அதன்பின்னர் அவர் மிக தீவிரமாக அரசியல் களத்தில் குதித்துவிடுவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவருடைய கட்சியில் பதவிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும் வகையில் திட்டங்களை தீட்டி வருகிறார். மற்ற அரசியல் கட்சிகளில் கட்சி பொறுப்பு, பல்வேறு அணிகளின் பொறுப்பு ஆகியவைகளுக்கு கிளை தலைவர்கள், செயலாளர்கள் தொடங்கி கட்சி தலைமை வரை ஏறத்தாழ 50 ஆயிரம் பதவிகள் இருக்கிறது. ஆனால் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியில் மற்ற கட்சிகளை விட 10-ல் ஒரு பங்கு அதாவது, ஏறத்தாழ 5 ஆயிரம் பதவிகளே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அனுபவமிக்க வயது முதிர்ந்தவர்கள் ஆட்சி பணியில் ஒரு சிலர் இருப்பார்கள், 48 வயதுக்கு குறைந்தவர்கள் பலர் முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில், ‘மாவட்ட செயலாளர்களிடம் கூறியது போல கட்சியில் இருந்தும் பொறுப்புகளுக்கு வருவார்கள். கட்சிக்கு வெளியே மற்ற கட்சிகளிலோ அல்லது கட்சிகளே வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கும் நல்லவர்களோ, நிச்சயமாக ஆட்சி பொறுப்புக்கு வருவார்கள்’ என்ற வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக ரஜினிகாந்த் கட்சி தொடங்கிவிட்டால் பிற கட்சிகளில் எந்தவித புகார்களுக்கு இடமில்லாமல் பணியாற்றியவர்களும், அரசியலிலேயே இதுவரை நுழையாமல் பல்வேறு துறைகளில் பிரகாசித்து வரும் ஆன்றோர்களுக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்பு வழங்க ரஜினிகாந்த் முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

கட்சி அறிவிப்பை வெளியிட்டவுடன் மிகப்பெரிய மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும், அந்த மாநாட்டை சென்னையில் நடத்தலாமா? அல்லது வேறு மாவட்டத்தில் நடத்தலாமா? என்பது தொடர்பாகவும் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Next Story