கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்திலும் தியேட்டர்களை மூட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்திலும் தியேட்டர்களை மூட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 March 2020 1:30 AM GMT (Updated: 12 March 2020 1:30 AM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்திலும் தியேட்டர்களை மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அண்மையில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் மாநிலம் முழுவதும் 1,225 பேருக்கு பூர்வாங்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 72 பேருக்கு ரத்த மாதிரி உள்ளிட்ட உயர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5 பேருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால், அவர்கள் தீவிர சிகிச்சையில் கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சரின் மற்றொரு அறிவிப்பில், மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 300 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் மட்டும் போதுமானதல்ல என சுட்டிக்காட்ட விரும்புவதோடு, நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த முறையிலான பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும். கேரளாவை போல தமிழகத்திலும் பொதுமக்கள் அதிகம் கூடும் சினிமா தியேட்டர்கள், விளையாட்டு மைதானங்களை மூட வேண்டும். தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story