ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு 2 ஆண்டு சிறை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு 2 ஆண்டு சிறை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 March 2020 12:47 PM IST (Updated: 12 March 2020 12:47 PM IST)
t-max-icont-min-icon

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சென்னை, 

சென்னை சூளை பகுதியில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கக்கோரி சேகர் என்பவர் இந்து அறநிலையத்துறையில் 2007-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

2009-ம் ஆண்டு, இந்த வழக்கு தீர்ப்புக்காக நிலுவையில் இருந்தபோது, சேகருக்கு ஆதரவாக தீர்ப்பு கூற அந்த சமயத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த டி.சுந்தரம் என்பவர் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் இந்த தொகையை, ரூ.1½ லட்சமாக குறைத்து முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இதுகுறித்து சேகர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, சேகர் ரூ.50 ஆயிரத்தை எடுத்து சென்றார். அப்போது அலுவலகத்தில் இருந்த சுந்தரம், பணத்தை உதவியாளர் சிவராஜிடம் கொடுக்கும்படி கூறி உள்ளார். அதன்படி சிவராஜிடம், சேகர் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓம்பிரகாஷ், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி சுந்தரத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும், உதவியாளர் சிவராஜுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story