சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் - டி.டி.வி.தினகரன் பேட்டி


சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் - டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-13T02:49:58+05:30)

சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என்று புதிய அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நவீன வசதிகளுடன் அ.ம.மு.க.வுக்கு புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து அ.ம.மு.க. தலைமை அலுவலகத்துக்கு முன்பு 50 அடி கொடி கம்பத்தில், ஜெயலலிதா உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல், முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், பழனியப்பன் உள்பட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருகிற சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. சிறப்பான கூட்டணியை அமைத்து அமோக வெற்றி பெறும். நாங்கள் கொள்கை உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். சசிகலா தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவரே தக்க பதில் அளிப்பார். அ.ம.மு.க.வுக்கு பிரசாந்த் கிஷோர் போன்றோர் தேவை இல்லை. அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களே போதும்.

அவர்களுடைய ஆற்றலால் வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைப்போம். சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் மற்றும் தென் மண்டலத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதி என 2 தொகுதிகளில் போட்டியிடுவேன். ரஜினிகாந்த் அவருடைய கொள்கையையும், எண்ணத்தையும் கூறியிருக்கிறார். அதைப் பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story