குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு தலைமைச்செயலகத்தில் இன்று நேரில் விளக்கம் - சிறுபான்மையினருக்கு தமிழக அரசு அழைப்பு


குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு தலைமைச்செயலகத்தில் இன்று நேரில் விளக்கம் - சிறுபான்மையினருக்கு தமிழக அரசு அழைப்பு
x
தினத்தந்தி 13 March 2020 9:30 PM GMT (Updated: 13 March 2020 5:04 PM GMT)

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு அரசிடம் சிறுபான்மையினர் நேரில் விளக்கம் கேட்பதற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான கூட்டம் இன்று தலைமைச்செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது பல்வேறு தரப்பு, குறிப்பாக சிறுபான்மை மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அந்த சட்டம் பற்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றன. அந்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து அதிகமாக நிலவுவதால் சில இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

எனவே தற்போதைய நிலைமை மேலும் மோசமடையாத வகையில் அதைத் தடுப்பதற்காக, சிறுபான்மை மக்களை நேரில் அழைத்து விளக்கம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, அவர்களின் சந்தேகங்களை நேரில் கேட்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக சிறுபான்மை அமைப்புகளுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் 12-ந்தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 தொடர்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே ஏற்பட்டு இருக்கும் சந்தேகங்களைக் களையும் வகையில் இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களை நேரில் கலந்து ஆலோசிக்க தலைமைச் செயலகத்தின் பழைய கட்டிடம் 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் எனது தலைமையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story