மின் கணக்கீட்டாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
மின் கணக்கீட்டாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டாளர்கள், இளநிலை உதவியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. மின் கணக்கீட்டாளர்கள் பணிக்கான தகுதியாக கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பிற பாடங்களில் குறிப்பாக பொறியியல், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளை படித்தவர்களால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர்களின் வேலைபெறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ற வேலை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நீதி. இதுதான் பா.ம.க.வின் கொள்கையும் ஆகும். ஆனால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலையில், இருக்கும் வேலைவாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மற்றும் பிற பட்டங்களை பெற்றவர்களும் மின் கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், என்.பி.ஆர். கணக்கெடுப்பில் ஐயத்துக்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசும் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
என்.பி.ஆர். தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தை போக்கி நம்பிக்கையையும், நிம்மதியையும் விதைக்கும் என்று நம்புவோம். என்.பி.ஆர். தயாரிப்பில் சர்ச்சைக்குரிய 3 வினாக்களை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாக போக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story