நாடாளுமன்றத்தில் அமித்ஷா அளித்த விளக்கத்தால் மக்கள் தொகை பதிவேடு குறித்த பொய் பிரசாரங்கள் முறியடிப்பு - டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா அளித்த விளக்கத்தால் அது குறித்த பொய் பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்.) தயாரிப்பின் போது மக்களிடம் எழுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய 6 வினாக்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள போதிலும், அதற்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் சர்ச்சைக்குரிய வினாக்களுடன் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான பணிகளை தொடங்கினால், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் அச்சம் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்து இருக்கிறார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு தற்காலிக நிம்மதியை அளிக்கக்கூடும். அடுத்தக்கட்டமாக மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து என்.பி.ஆர். கணக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய கேள்விகளை முழுமையாக நீக்கவும், அதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் அச்சத்தை முழுமையாக போக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
மற்றொருபுறம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய முஸ்லிம்கள் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த விளக்கத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கான சர்ச்சைக்குரிய வினாக்கள் பற்றி விளக்கமளித்த அமித்ஷா, என்.பி.ஆர். கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் வினாக்களில், அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை; தெரிந்த தகவல்களை மட்டும் அளித்தால் போதுமானது; எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை; தகவல்களை தராதவர்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் என்று குறிப்பிட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு குறித்து எந்தவிதமான அச்சமும் தேவையில்லை என்றும் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின்போது சர்ச்சைக்குரிய வினாக்கள் எழுப்பப்படும்; அவற்றுக்கு விடை அளிக்காவிட்டால் சந்தேகத்துக்கு இடமானவர்களாக அறிவிக்கப்பட்டு, குடியுரிமை பறிக்கப்படும் என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு பொய்யான பிரசாரம் செய்து வந்தன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் விளக்கத்துக்கு பிறகு பொய்யான பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டு இருக்கின்றன. இனியும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். பற்றி தேவையற்ற, பொய்யான தகவல்களை கூறி மக்களை அச்சுறுத்தும் செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story