2 ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க. ஏமாற்றியது - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


2 ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க. ஏமாற்றியது - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 14 March 2020 12:15 AM GMT (Updated: 14 March 2020 12:13 AM GMT)

2 ஏக்கர் நிலம் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு ஏழை, எளிய மக்களை தி.மு.க. ஏமாற்றியது என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் (கன்னியாகுமரி) பங்கேற்று பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

ஆஸ்டின் (தி.மு.க.):- இந்த அரசின் கடைசி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நான் பேசுகிறேன். (இவ்வாறு தன் பேச்சின் தொடக்கத்தில் அவர் பேசியதும் அ.தி. மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர்).

அமைச்சர் தங்கமணி:- உறுப்பினர் ஆஸ்டின் பங்கேற்கும் கடைசி கூட்ட தொடராக இது இருக்கும். எனவே அவர் அப்படி பேசுகிறார். 2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்.

ஆஸ்டின்:- மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு என்று மதுபாட்டில்களிலே எழுதப்பட்டுள்ளது. இதை அரசே விற்பனை செய்கிறது.

அமைச்சர் தங்கமணி:- உங்கள் ஆட்சியில் மது பாட்டில்களில் திருக்குறளா எழுதி வைத்திருந்தீர்கள். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்று எழுதப்பட்டிருக்கிறது. மலிவு விலை சாராயத்தை கொண்டு வந்தது நீங்கள் (தி.மு.க.)., நீங்கள் கொண்டு வந்த மலிவு விலை சாராயத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறுத்தினார். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது தான் இந்த அரசின் கொள்கை. அதை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆஸ்டின்:- அரசே மது விற்கும் திட்டத்தை அ.தி.மு.க. தான் கொண்டு வந்தது.

அமைச்சர் தங்கமணி:- 2006-2011-ல் யார் ஆட்சியில் இருந்தது, நீங்கள் தானே. நீங்கள் நிறுத்தியிருக்கலாமே. கள்ளச்சாராயம் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், உயிர்பலி ஏற்படுவதை தவிர்க்கவும் தான் தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனையை அரசே எடுத்தது. தி.மு.க. ஆட்சியின்போது, மதுக்கடைகளை அரசு தானே நடத்தியது.

ஆஸ்டின்:- படிப்படியாக 5 ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

அமைச்சர் தங்கமணி:- பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று தான் ஜெயலலிதா கூறினார். இதற்காக மக்கள் மத்தியில் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார். 5 ஆண்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று நாங்கள் சொல்லவில்லை. படிப்படியாக குறைப்போம் என்று தான் சொல்லியிருக்கிறோம். கடந்த கூட்டத்தொடரிலேயே அ.தி. மு.க. தேர்தல் அறிக்கையை படித்து காட்டியிருக்கிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று சொன்னீர்கள். எத்தனை விவசாயிகளுக்கு கொடுத்து இருக் கிறீர்கள்?, எங்கே கொடுத்தீர்கள்?, எத்தனை விவசாயிகள் பயன்பெற்று இருக்கிறார்கள்?. தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்ற போது படிப்படியாக தான் எல்லாமே செய்ய முடியும். குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்திட முடியாது. ஒரு திட்டம் என்று சொன்னால், அதனை அறிவிக்கின்ற போது படிப்படியாக தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். மதுக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று சொல்லி இருக்கின்றார். குறைத்துக்கொண்டும் இருக்கிறோம்.

நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை எல்லாம் தெளிவாக சொல்லி இருக்கின்றார். உங்களுடைய தலைவர் எப்படி எல்லாம் பேசியிருக்கின்றார் என்ற எல்லா குறிப்புகளும் எங்களிடம் இருக்கிறது. எல்லோரும் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இன்றைக்கு பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறீர்கள். படிப்படியாக தான் அதை செயல்படுத்த முடியும். கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அரசு கவனமாக இருந்து, அதை பின்பற்றி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்ற செய்தியை சொல்லி இருக்கின்றது.

தி.மு.க. கொறடா சக்கரபாணி:- 2001-2006-ம் ஆண்டு உங்கள் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த பொன்னையன், பல லட்சம் ஏக்கர் சதுப்புநிலம் இருக்கிறது, இதனை கார்ப்பரேட் நிறுவனத்திடம் கொடுத்து பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார். அதனை அடிப்படையாக வைத்து தான் எங்களது தலைவர் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். 2 ஏக்கர் நிலம் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது. எனவே கொடுக்கவில்லை என்று சொல்வது தவறு.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- பல லட்சம் பேருக்கு நிலம் கொடுத்தோம் என்று சொன்னார்கள். லட்சம் எல்லாம் இல்லை, ஒரு சில பேருக்கு கொடுத்திருக்கிறீர்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதை யாரும் மறைக்க முடியாது. யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரம் எனக்கு தெரியும். எல்லாமே அதிகாரபூர்வமாக இருக்கிறது. நீங்கள் கவர்ச்சிகரமான அறிவிப்பு கொடுத்தீர்கள். அந்த அறிவிப்பின் மூலமாக நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். அதுதான் நடந்ததே தவிர, என்ன சொன்னீர்கள்.

தமிழகத்தில் இருக்கிற நிலமற்ற விவசாயிகளுக்கு கொடுப்பதாக சொன்னீர்கள். எத்தனை லட்சம் பேர் நிலமற்ற விவசாயிகள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தீர்களா?. எவ்வளவு நிலம் இருக்கிறது, எப்படி கொடுக்க முடியும்? நிலமற்ற விவசாயிகள் என்று சொன்னால் எத்தனை லட்சம் பேர் நிலமற்ற விவசாயிகள் இருக்கின்றார்கள், அரசாங்கத்திடம் அத்தனை லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறதா? எப்படி பகிர்ந்து கொடுக்க முடியும்? இதை எல்லாம் ஒரு கற்பனையாக, எப்படியாவது மக்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காகத்தான் இந்த அறிவிப்புகளை கொடுத்தீர்களே தவிர, உண்மையான திட்டம் அல்ல.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்ன நீங்கள், கடைசியில் கையளவு நிலமாவது கொடுப்போம் என்றீர்கள். அதையும் எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள். உங்கள் ஆட்சியில் இந்த திட்டம் தோல்வி அடைந்து விட்டது. இது தான் உண்மை.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- 2001-2006-ம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்த பொன்னையன் சொன்னதை வைத்துக்கொண்டு நாங்கள் வாக்குறுதி கொடுத்தோம் என்று கூறுகிறீர்கள். நீங்கள் ஒன்றும் புதிதாக ஆட்சிக்கு வரவில்லையே. 5 முறை உங்களது தலைவர் (கருணாநிதி) ஆட்சி செய்தார். தமிழ்நாட்டில் மொத்தம் எவ்வளவு நிலம் இருக்கிறது, அரசு நிலம் எவ்வளவு?, புறம்போக்கு நிலம் எவ்வளவு? என்ற விவரம் உங்களுக்கு தெரியாதா? அப்படி தெரிந்திருந்தும் நாங்கள் சொன்னதை வைத்துக்கொண்டு வாக்குறுதி கொடுத்தோம் என்கிறீர்கள். தமிழ்நாட்டில் 82 லட்சம் நிலம் இல்லாத விவசாயிகள் இருக்கிறார்கள். ஆளுக்கு 2 ஏக்கர் என்றால் ஒரு கோடியே 64 லட்சம் ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். 5 முறை முதல்-அமைச்சராக இருந்த உங்களது தலைவருக்கு இது தெரியுமா? தெரியாதா?. தெரிந்தும் நீங்கள் பேசலாமா?.

ஆஸ்டின்:- மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக சொல்லி அதிகரித்திருக்கிறீர்கள். மதுக்கடைகளை அதிகரிக்க அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

அமைச்சர் தங்கமணி:- 2011-ம் ஆண்டு 6 ஆயிரத்து 715 மதுக்கடைகள் இருந்தன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், 500 கடைகளை மூடினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 500 கடைகளை மூடினார். மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஜெயலலிதா குறைத்தார். மதுக்கடைகளை அதிகரிக்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story