அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்


அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 March 2020 8:30 PM GMT (Updated: 15 March 2020 8:30 PM GMT)

தமிழ்நாட்டில் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்பட்டு, 8 ஆண்டுகள் கழித்து 2015-16-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 5 ஆண்டுகள் ஆகியும் அந்த அரசாணை செயல்பாட்டுக்கு வரவில்லை.

தமிழகத்தில் உள்ள 80 சதவீதம் பள்ளிகளில் இன்று வரை தமிழ் கற்பிக்கப்படவில்லை. இந்திய இடைநிலை கல்விச் சான்றிதழ் பாடத்திட்டம், இந்திய பள்ளித் தேர்வு சான்றிதழ் குழு பாடத்திட்டம், கேம்பிரிட்ஜ் வாரியப் பாடத்திட்டம் ஆகியவற்றில் தமிழ்ப் பாடத்தை கட்டாயம் ஆக்குவதற்கான எந்த முயற்சியும் இன்னும் தொடங்கப்படவில்லை. இது பெருமைக்குரிய வி‌‌ஷயமல்ல.

தமிழ்நாட்டில் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்க சட்டப்படி எந்த தடையும் இல்லை. இன்னும் கேட்டால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது.

மக்களின் உணர்வும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடமாக்க அரசுக்கு தடையாக இருப்பது எதுவென்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் தமிழை நேசிக்காத எந்த கல்வி முறையும் முன்னேற முடியாது. எனவே, உயர்நீதிமன்றத்தை அணுகி 10-ம் வகுப்பில் தமிழைக் கட்டாயப் பாடமாக படிப்பதில் இருந்து சில பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கும் தீர்ப்பை ரத்து செய்ய வைக்க வேண்டும். அதன்பின் உரிய ஆணைகளை பிறப்பித்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி வாரியப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story