தமிழக எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி


தமிழக எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி
x
தினத்தந்தி 15 March 2020 10:00 PM GMT (Updated: 15 March 2020 9:35 PM GMT)

தமிழக எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை தேனாம்பேட்டை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நபருடன் பயணம் செய்த பயணிகளின் தகவல்கள் வந்துள்ளது. அவர்களில் யாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும். மேலும் அவர்கள் வீட்டில் வைத்து கண்காணிப்போம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story