கொரோனா வைரஸ் பரவுவதால் வணிக வளாகங்கள், தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது


கொரோனா வைரஸ் பரவுவதால் வணிக வளாகங்கள், தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 16 March 2020 12:15 AM GMT (Updated: 16 March 2020 12:22 AM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதால் வணிக வளாகங்கள், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறைந்தது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தனிகவனம் செலுத்தி உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் கூட்டம் குறைய தொடங்கி உள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னையில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இல்லை. தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை தியாகராயநகர் ரெங்கநாதன் தெருவிலும் நேற்று பகலில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. ஆனால் அதே சமயம் நேற்று மாலையில் சென்னை தியாகராயநகர் ரெங்கநாதன் தெருவில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்ய ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் தெற்கு ரெயில்வே மற்றும் போக்குவரத்து துறை உதவியுடன் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளை ‘தெர்மல் ஸ்கேனர்’ எனும் கருவி மூலம் அவர்களது உடல் வெப்பநிலையை கண்காணிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் பல்வேறு சோதனை செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பீதியால் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பெரும்பாலான பயணிகள் முக கவசம் அணிந்தவாறு ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றி வருகின்றனர். நடைமேடைகளில் உள்ள ரெயில் பெட்டிகளின் வெளியே ரெயில்வே ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.

இதேபோல் கோயம்பேடு பஸ் நிலையத்திலும் வெளிமாநில பயணிகளுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ உதவியுடன் முதல்கட்ட பரிசோதனை சுகாதாரத்துறை ஊழியர்கள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள், அண்டை மாநில எல்லையில் உள்ள ரெயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளியூர் பயணம் செய்வதை பலர் தவிர்த்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான ரெயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில்களில் நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

மேலும் ரெயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு குறித்த அறிவிப்புகள் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் ஒலிபரப்பப்படுகிறது. சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு உடையுடன் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடபழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மருத்துவ கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் சித்ராதேவி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story