தி.மு.க. பொதுச்செயலாளர் யார்? 29-ந்தேதி பொதுக்குழு கூட்டம்


தி.மு.க. பொதுச்செயலாளர் யார்? 29-ந்தேதி பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2020 12:27 AM GMT (Updated: 16 March 2020 12:27 AM GMT)

தி.மு.க. பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க அக்கட்சியின் பொதுக்குழு வரும் 29-ந்தேதி கூடுகிறது.

சென்னை, 

தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து வந்த க.அன்பழகன் கடந்த 7-ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி காலியானது. கடந்த 43 ஆண்டுகளாக தி.மு.க. பொதுச்செயலாளராக அன்பழகன் அந்த பதவியில் அங்கம் வகித்து வந்தார்.

கட்சி சார்பில் வெளியிடப்படும் எந்த அறிவிப்பு என்றாலும் பொதுச்செயலாளரே வெளியிட முடியும் என்பதால் இந்த பதவி முக்கியத்துவம் உடையதாக கருதப்படுகிறது. தி.மு.க.வை அண்ணா தொடங்கிய போது, பொதுச்செயலாளர் பதவியை தன் வசம் வைத்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச்செயலாளர் பதவிக்கு நெடுஞ்செழியனும் வந்தனர்.

நெடுஞ்செழியனுக்கு பிறகு அன்பழகன் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இறப்பு வரை அந்த பதவியில் அன்பழகன் இருந்தார். தற்போது காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவரை தேர்வு செய்யும் முக்கிய காலக்கட்டத்தில் தி.மு.க. உள்ளது. இந்தநிலையில், தி.மு.க. அவசர பொதுக்குழு கூட்டம் வரும் வருகிற 29-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 29-ந்தேதி காலை 10 மணிக்கு, அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தற்போது உள்ள சூழ்நிலையில், தி.மு.க. பொருளாளராக உள்ள துரைமுருகன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் போட்டியின்றி பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. பொதுக்குழுவையொட்டி உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,500 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அவர் வகித்து வரும் பொருளாளர் பதவிக்கு இன்னொருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பொருளாளர் பதவியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story