குடிநீர் வாரியத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்


குடிநீர் வாரியத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்
x
தினத்தந்தி 16 March 2020 8:30 PM GMT (Updated: 16 March 2020 7:09 PM GMT)

குடிநீர் வாரியத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறினார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. கொறடா சக்கரபாணி (ஒட்டன்சத்திரம் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் சக்கரபாணி:- திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் - அவினாசி இடையே சாலை பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட 3 இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். எனவே, அந்த 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் 12 ஆயிரம் பேர் வேலை செய்த இடத்தில், இப்போது 3,500 பேர் தான் வேலை செய்கிறார்கள். இதனால், பணிகள் பாதிக்கப்படுகிறது. குடிநீர் வாரியம் தனியார் மயமாக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. 90 சதவீத பணிகள் அப்போது நிறைவேற்றப்பட்டன. பின்னர், நீங்கள் (அ.தி.மு.க.) ஆட்சிக்கு வந்தவுடன் மீதி பணியை முடித்து திட்டத்தை நிறைவேற்றினீர்கள்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி துறையில் செய்யப்பட்ட சாதனையைவிட, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 3 மடங்கு சாதனை செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்து சாதனை செய்து வருகிறது. குடிநீர் வாரியத்தில் 25 சதவீதம் அளவுக்கு மட்டுமே பணியாளர்கள் உள்ளதாக உறுப்பினர் கூறினார். அங்கு தேவையான அளவுக்கு பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே குடிநீர் வழங்குவதில் தமிழகம் சாதனை செய்து வருகிறது. ரூ.39,849 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மொத்தம் 4 லட்சத்து 58 ஆயிரம் எண்ணிக்கையில் பணிகள் நடைபெற்றுள்ளன. தி.மு.க. ஆட்சி காலத்தில் 50 ஆயிரம் பணிகள் தான் நடந்தன.

148 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் வந்தது. உடனே முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் நானும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஆந்திர முதல்-மந்திரியை சந்தித்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தோம். உடனே, 6.4 டி.எம்.சி. கிரு‌‌ஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது, கூடுதலாக தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை 1986-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கொண்டுவந்தார். பின்னர், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2006-ம் ஆண்டு நீங்கள் (தி.மு.க.) ஆட்சிக்கு வந்தபோது 15 சதவீத பணிகளைத்தான் முடித்தீர்கள். மீதமுள்ள பணிகளை முடித்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதாதான்.

குடிநீர் வாரியத்தை மூடப்போவதாக உறுப்பினர் தெரிவித்தார். குடிநீர் வாரியத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. எந்த வாரியமும் மூடப்படாது. முதல்-அமைச்சர் தேவையான நிதியை ஒதுக்கியுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story