கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பதில்


கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 16 March 2020 9:45 PM GMT (Updated: 16 March 2020 8:15 PM GMT)

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் காங்கிரசார் நடத்திய பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் பேரவை விதி 56-ன் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் தண்டியாத்திரையை நினைவுபடுத்தும் விதமாக நடந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்பட்டதாக கூறி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:-

காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்றதன் நினைவாக, இளைஞர் காங்கிரஸ் சார்பில், கடந்த 12-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் காமராஜர் சிலை சந்திப்பில் இருந்து இரணியல் சந்திப்பு வரை, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் என்பவர் பாதயாத்திரை செல்ல அனுமதி கோரி, கடந்த 10-ந்தேதி குளச்சல் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார்.

பாதயாத்திரை செல்ல உள்ள சாலை, போக்குவரத்து நெருக்கடியான சாலை என்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும், பாதயாத்திரைக்கு அனுமதி மறுத்து அதற்கான குறிப்பாணையை காவல்துறையினர் அவரிடம் வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில், அன்றையதினம் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பு அருகே காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த சுமார் 25 பேர் கூடியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், பாதயாத்திரை மேற்கொள்ளக்கூடாது என கூறியதையடுத்து, அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரினர். அதனை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், அதற்கு மட்டும் அனுமதி அளித்தனர்.

இதற்கிடையே, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த 21 பேர், காமராஜர் சிலையிலிருந்து, சற்று தொலைவில் அமைந்துள்ள அண்ணா சிலை சந்திப்பு அருகே அனுமதியின்றி கூடி பாதயாத்திரை செல்ல முற்பட்ட போது, காவல் துறையினர் அவர்களிடம் அனுமதியின்றி பாதயாத்திரை செல்லக்கூடாதென்று கூறி, அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அவர்கள் கலைந்து செல்லாததால், காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முற்பட்டனர். இதற்கும் அவர்கள் ஒத்துழைக்காமல், காவல் துறையினருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டும், பணி செய்ய விடாமல் தடுத்தும் தாக்கியும் உள்ளனர்.

இச்சம்பவத்தில் நான்கு காவலர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 21 பேர்களில், லாரன்ஸ் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மீதமுள்ள 15 பேர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

லாரன்ஸ் மீது இரண்டு அடிதடி வழக்குகளும், இரண்டு எரி சாராயக் கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருந்து வருவதுடன், அவர் மீது போக்கிரி சரித்திர பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கே உறுப்பினர்கள் குறிப்பிடும்போது, மிருகத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று சொன்னார்கள். காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் எந்தவொரு கருத்துவேறுபாடோ, எந்தவொரு பிரச்சினையோ இல்லை.

ஆகவே, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக இருக்கின்ற காரணத்தினால் அனுமதி கொடுக்க மறுத்திருக்கின்றார்கள். அவர்கள் ஒத்துழைப்பு நல்கி இருந்தால், இந்தப் பிரச்சினையே ஏற்பட்டு இருக்காது என்பதையும் தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதுபோல் தடியடி ஏதும் போலீசாரால் நடத்தப்படவில்லை என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story