பாதிப்படைந்த ஒருவரும் குணமாகி விட்டார்: தமிழகத்தில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை - துரைமுருகனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்


பாதிப்படைந்த ஒருவரும் குணமாகி விட்டார்: தமிழகத்தில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை - துரைமுருகனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்
x
தினத்தந்தி 16 March 2020 10:00 PM GMT (Updated: 16 March 2020 8:30 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட ஒருவரும் முழுமையாக குணமாகி விட்டார் என்றும் துரைமுருகனுக்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் இதே பேச்சு தான். கேரளா, ஆந்திரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தை கூட அவர்கள் தள்ளிவைத்து இருக்கிறார்கள். நீங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருக்கிறீர்கள். அதை கூட தெளிவாக சொல்லவில்லை. கிராமங்களிலும், ஒன்றியங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை ஆராய வேண்டும்.

அரசியல் கட்சிகள் கூட்டம் கூட்டுவதை கூட தவிர்க்க வேண்டும். இது சம்பந்தமாக நம்முடைய முதல்-அமைச்சர், பக்கத்து மாநில முதல்-மந்திரிகளிடம் பேச வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எல்லோரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறோம். ஒன்று உயிரை விடனும் அல்லது உயிரை காப்பாத்தனும். அதனால், மக்களை அரசு தான் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தனக்கே உரிய நகைச்சுவையுடன் பேசினார்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி துணைத்தலைவர் சீரியசான விஷயத்தை கூட நகைச்சுவையுடன் கூறி, அதன் பாதிப்பை கூறியிருக்கிறார். உலக சுகாதார நிறுவனம் 60 அல்ல 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் வெளியில் செல்ல வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. நிச்சயமாக தமிழக அரசு மக்களை காப்பாற்றும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் உள்பட 16 மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். மக்களும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் அளிக்கும் தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு அளித்து வருகிறோம். மலேசியா, சிங்கப்பூர் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் ஒருவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. அவர் சென்னை, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார். தற்போது அவரும் குணமடைந்துவிட்டார். இன்று (நேற்று) மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த நிமிடம் வரை தமிழகத்தில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story