கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சினிமா படப்பிடிப்புகள் 19-ந் தேதி முதல் ரத்து - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சினிமா படப்பிடிப்புகள் 19-ந் தேதி முதல் ரத்து - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 11:00 PM GMT (Updated: 16 March 2020 10:53 PM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் வருகிற 19-ந் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று பெப்சி தலைவர் ஆர்.கெ.செல்வமணி அறிவித்துள்ளார்.

சென்னை, 

தென்னிந்திய திரைப்பட சம்மேளன (பெப்சி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சண்முகம், சாமிநாதன், சபரி கிரீசன், ஸ்ரீதர், இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் தீனா, டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளிகளையும், எல்லையோர திரையரங்குகளையும் மூட உத்தரவிட்டு உள்ளது.

சினிமா துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் அற்ற நிலையில் உள்ளதால் திரைப்பட தொழிலாளர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே அனைத்து திரைப்பட சங்கங்களும் இணைந்து உடனடியாக பணிகளை நிறுத்த பரிசீலித்தோம்.

வெளியூர் படப்பிடிப்புகளுக்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்த தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும். தற்போது 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி தொடர் படப்பிடிப்புகளும் நடக்கின்றன. இவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.

படப்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இதனால் வேலை இழப்பு ஏற்படும். அவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் 31-ந் தேதி வரை கில்டு சார்பாக நடைபெறும் அனைத்து திரைப்பட படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story