கொரோனா வைரசால் தேவை அதிகரிப்பு: முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை


கொரோனா வைரசால் தேவை அதிகரிப்பு: முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 March 2020 11:45 PM GMT (Updated: 16 March 2020 11:29 PM GMT)

கொரோனா வைரஸ் காரணமாக தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பீதியால் தற்போது முகக்கவசம் மற்றும் சானிடைசர், திரவ சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு மக்களிடையே தேவை அதிகரித்து உள்ளது. இதை பயன்படுத்தி அந்த பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக மக்கள் பயணம் செய்யும் பொழுது விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் என பொதுவாக மக்கள் கூடும் இடங்களில் நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வருகின்றனர்.

மேலும் நோயின் தொற்றினை தவிர்க்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் சுகாதார அறிவுரைகளை செல்போன் மூலமாக விளம்பரம் செய்து அடிக்கடி கைகளை சோப்பு, திரவ வடிவிலான சோப், சானிடைசர் போன்றவைகளை கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இந்த பொருட்கள் சந்தையில் அதிக தேவை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு சில விற்பனையாளர்கள் இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக தெரிகிறது.

எனவே முகக்கவசம், சோப்பு, திரவ சோப், சானிடைசர் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் கன்டெய்னர் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகள் 2011-ன் படி அந்த பாக்கெட்டுகளில் தயாரிப்பாளர், பேக்கர் முழுமுகவரி, பொருளின் அளவு அல்லது எண்ணிக்கை, நிகர எடை, அளவு பொருள் தயாரிக்கப்பட்ட மாதம், வருடம், காலாவதியாகும் மாதம், வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (அனைத்து வரிகள் உள்பட) புகார் அளிக்கவேண்டிய தொலைபேசி எண் இ-மெயில் முகவரி ஆகியவற்றினை தெளிவாக பாக்கெட்டுகளில் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறி பொட்டலம் இடுபவர்கள் மீதும், பொருளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு அதிகமாக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படு கிறது.

பொதுமக்கள் மேற்கண்ட பொருட்களில் குறிப்பிட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள், கடைகள், மருந்து கடைகள் போன்றவை குறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறையினரால் நுகர்வோர் நலன் கருதி செயல்பட்டு வரும் TN-L-M-C-TS என்ற செல்போன் ஆப்-ஐ டவுன்லோடு செய்து புகார் தெரிவிக்கலாம். cl-m-c-h-e-n-n-a-itn@gm-a-il.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவோ அல்லது 044-24321438 என்ற தொலைபேசி வாயிலாகவோ புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story